சென்னையில் உள்ள ஆவடி பேருந்து நிலையத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது சேக்காடு பெரிய ஏரி; அதையோட்டியே சித்தேரி என்ற ஏரியும் உள்ளது.
<!-- wp:more --> <!--more--> <!-- /wp:more -->
இந்த இரண்டு ஏரிகளும், 294 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கடந்த, 2018ம் ஆண்டில் கூட இந்த ஏரியைப் பொதுப்பணித்துறை 16 லட்சம் ரூபாய் செலவில் தூர்வாரியுள்ளது.

அதற்கு ஒரே அடையாளம் ஏரிக்கரையில் பொதுப்பணித்துறை வைத்துச் சென்றிருக்கும், தூர்வாரியதற்கான அறிவிப்புப் பலகை மட்டுமே.
அந்த ஏரிகளைச் சுற்றியிருந்த விவசாய நிலங்களை அழிச்சாச்சு; வரத்து கால்வாய்களை ஆக்கிரமிச்சாச்சு; இருக்கிற கொஞ்ச ஏரி நிலத்தையும் வாரி எடுத்தாகிவிட்டது.
தற்போது பெயரளவில் மட்டுமே ஏரியாக உள்ளது. ஆனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால், சோழர் காலத்தில் இந்த ஏரி உண்மையில் பெரிய ஏரியாக இருந்திருக்கிறது.
அதற்கான ஆதாரங்கள் நம் கண்ணில் சிக்கியிருக்கின்றன. முதல்முறை பார்த்தபோது, ஏரிக்கரையில் சேராத்தம்மன் கோவில் இருப்பதும், அந்த கோவிலுக்கு முன், ஊன்றி வைக்கப்பட்ட கல்லில் சந்தனம், குங்குமம் பூசி ஊர் மக்கள் குல தெய்வமாக வழிபட்டதும்தான் தெரிந்தது.



அப்போது அந்தக் கல், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டு என்பது தெரியவில்லை. அந்தக் கல்லில் சூலமும், சக்கரமும் பொறிக்கப்பட்டு இருந்தது, கூடவே சில தமிழ் எழுத்துக்களும் தெளிவாக தெரிந்தது.
அந்த கோவிலைக் குலதெய்வமாக வழிபடும் ஒருவர் அடிக்கடி இங்கு வந்து இந்தக் கல்லில் என்ன எழுதியிருக்கிறது என, வாசித்துவிட்டுச் செல்வதாகவும், புரியாமல் ஏமாற்றத்துடன் செல்வதாகவும் கூறினார். அங்கிருந்து உருவானதுதான் இந்தக் கட்டுரை; நானும் பலமுறை அந்த ஏரிக்கரையில் சுற்றியிருக்கிறேன். தொல்லியல் அமைச்சர் பாண்டியராஜனும் இரண்டு முறை அங்குச் சென்றிருக்கிறார்.
ஆனால், வரலாறு கண்முன்னே ஊன்றி வைக்கப்பட்டிருந்ததை யாரும் கவனிக்கவில்லை. எனக்குத் தெரிந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்களை அழைத்துவந்து கல்வெட்டு எழுத்துக்களைப் படித்தால் ஆயுள் குறையுமென ஊர்மக்கள் தடுத்தனர். நான் செத்தாலும் பரவாயில்லை, எனக்குச் சோறு போடுவதே இந்தக் கல்வெட்டுகள் தான் என, புன்னகையோடு கல்வெட்டு எழுத்துக்களைப் படிக்க துவங்கினார் தொல்லியல் ஆராய்ச்சி மாணவர் முருகன்.
கல்வெட்டில் என்ன இருக்கிறதெனத் தெரிந்து கொள்வதற்கு முன், சோழர் கால ஆட்சிக்காலத்தில் சென்னை எப்படி இருந்ததெனத் தெரிந்தால் பயனுள்ளதாக இருக்கும். சோழ பேரரசு கி.பி. பத்தாம் நூற்றாண்டில் தென்னிந்தியா, ஸ்ரீலங்கா, கடாரம் என்ற இன்றைய மலேசியா வரை பரவி இருந்தது.
இப்பகுதிகளை, ஒன்பது மண்டலங்களாக பிரித்து ஆட்சி செய்து வந்த சோழர்கள், தமிழகத்தின் வட பகுதியை ஜெயங்கொண்ட தொண்டை மண்டலம் எனக் குறிப்பிட்டுள்ளனர். தொண்டை மண்டலம், நிர்வாக ரீதியாக, 24 கோட்டங்களாக பிரிக்கப்பட்டு, அதில், புலியூர் கோட்டம், புழற்கோட்டம் ஆகியவை சென்னையை உள்ளடக்கியது என்பதற்கு, ஏற்கனவே கிடைத்த கல்வெட்டுகள், செப்பேடு ஆதாரங்கள் உள்ளன.
இப்போது சேக்காடு ஏரிக்கரை கல்வெட்டு என்ன சொல்கிறதெனப் பார்க்கலாம்…



பிற்கால சோழர் ஆட்சி காலத்தில், சிற்றரசராக விளங்கிய தெலுங்கு சோழனான விஜய கண்ட கோபாலனின்,16வது ஆட்சிக்காலத்தில்,
புலியூற்கோட்டத்திற்குட்பட்ட சேற்காடு ஏரி நிலத்தையும், ஏரியில் மீன்பிடி உரிமையையும் அகத்தீஸ்வரமுடையார் கோவிலுக்குத் தேவதானமாக வழங்கப்பட்டுள்ளது.
ஏரியில் வளரும் மீன்களையும், அதன் வளங்களையும் பயன்படுத்தி கோவில் திருப்பணி மேற்கொள்ள வேண்டும்.
கல்வெட்டில் சிதறிக்கிடத்த தமிழ் எழுத்துக்களைக் கோர்த்து தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள், இந்தச் செய்தியைச் சொன்னார்கள்.



ஏரியில் தொன்மையான தாழிகளின் உடைந்த பகுதிகள், கிராபைட் என்ற செம்புரான் கற்கள் காணக்கிடக்கின்றன. அந்தக் காலத்தில் இப்பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்களும் உள்ளன.
அரசன் வைத்த ஒரு கல்வெட்டால், அக்கால மக்கள் ஏரியை ஆக்கிரமிக்கவில்லை. சோழ மன்னனை பொறுத்த வரை, ஏரியையும் பாராமரித்த மாதிரி இருக்கும், கோவில் திருப்பணியும் நடந்த மாதிரி இருக்கும். என்கின்றனர் தொல்லியல் ஆய்வாளர்கள்.
கல்வெட்டில் கோலமாவு பூசி, படித்துவிட்டு, அதை சுத்தமாக கழுவி அங்கிருந்து புறப்படும் நேரத்தில் ஒரு குரல் கேட்டது.
“எங்க தாத்தாவுக்கு தாத்தா காலத்திய கல்வெட்டு ஒன்று அந்த மடையில் இருக்கிறது” என்ற குரல் வந்த திசையில் திரும்பினால் கோவிந்தராஜ். அவர் வேறுயாருமில்லை அந்த ஊரின் கடைசி தலைமுறை விவசாயி.
அந்தக் கல்வெட்டில், இன்னொரு ஆச்சரியம் காத்திருந்தது.
சோழர் காலத்திற்குப் பின், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் பெரியஏரி, சித்தேரியின் பயன்பாடு அதிகரித்திருந்ததுதான் அந்தத் தகவல்.



ஒரு மடையில் இருந்து மட்டும், 325 ஏக்கர் பரப்பில் பாசன நிலங்கள் பயன் பெற்றன என்ற குறிப்புகள உள்ளன.
ஏரித்தண்ணீரை தேவைக்கேற்ப திறந்து விடுவதற்கு, மடையில் 4 இன்ச் விட்டத்தில் துளை என ஆங்கிலேயர்கள் ஏரியைப் பராமரிப்பதில் பின்னி எடுத்திருக்கிறார்கள்.
அதுபோக, ஏரியின் தென்புறம் செல்லும் கூவம் ஆற்றில் இருந்து ஏரிக்குத் தண்ணீர் கொண்டு வர இரும்பு குழாய் அமைக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு, இந்த ஏரி சோழர் காலத்திலும், ஆங்கிலேயர் காலத்திலும் நீர்வரத்து அதிகம் கொண்டதாக, மக்களை வாழ வைத்ததாக இருந்திருக்கிறது.
ஆனால், திராவிட ஆட்சியில் அந்த ஏரியே வாழ்விழந்து, அழிவை நோக்கிச் செல்கிறது.
கல்வெட்டு ஆய்வாளர்கள்: 1. ஸ்ரீதரன், ஓய்வு பெற்ற தொல்லியல் துறை துணை கண்காணிப்பாளர், 2. ஸ்ரீகுமார், நிலயியல் வல்லூனர், 3. முருகன், கல்வெட்டு ஆராய்ச்சி மாணவர்.


