நெல்லை வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலம் ஒரு நீண்ட நிழற்குடை போல... வெயிலுக்கு ஒதுங்க இதமாக இருக்கும்... அதுவும் சாலையில் செல்லும் வாகனங்களை வேடிக்கை பார்ப்பது என்பது பத்திரிக்கை துறையில் நிகழ்வுகளை உன்னிப்பாக கவனிப்பது போன்ற வேலையை ஒத்திருப்பதால் அடிக்கடி வேடிக்கை பார்ப்பது எனக்கு பிடித்தமான ஒன்று. அங்கிருந்து தான் செய்தியின் திசையை நோக்கி நகர்வது உண்டு. அப்படித்தான் அன்றும் வண்ணாரப்பேட்டை செல்லபாண்டியன் மேம்பாலத்தில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள தாலுகா காவல் நிலையத்திற்கு சென்றேன்.....
அங்கே நான் பார்த்த காட்சி, நவீன தொழில்நுட்பத்தின் மீதான நமது குருட்டு நம்பிக்கையைச் சற்றே அசைத்துப் பார்த்தது. காவல் நிலையத்தின் படிகளில் ஒரு இளைஞன் கையில் சில காகிதங்களோடு, முகத்தில் ஆற்றாமையுடன் நின்றுகொண்டிருந்தான். அவனது தவிப்பு அவனுக்கானது அல்ல; பிரசவ காலத்தின் வலிகளைச் சுமந்துகொண்டு தாய் வீட்டிற்கு ஓய்வெடுக்க வந்த அவனது நிறைமாத கர்ப்பிணியான அக்காவுக்கானது.
'கடன் அட்டை' (Credit Card) என்பது நவீன உலகில் நமக்கான பொருளாதாரப் பாதுகாப்பு என்றும், அவசரத் தேவைகளுக்கான சஞ்சீவி என்றும் நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால், அதே வங்கியின் பெயரைக் கூறிக்கொண்டு, கடன் அட்டையின் எல்லையை (Limit) அதிகரிப்பதாகச் சொல்லி வந்த ஒரு தொலைபேசி அழைப்பு, அவளது ஒட்டுமொத்த சேமிப்பையும் உறிஞ்சும் வலையாக மாறும் என்று அந்தச் சகோதரி கனவிலும் நினைத்திருக்க மாட்டாள். வங்கி அதிகாரி என மிகவும் அக்கறையாகப் பேசிய குரலை நம்பி, தன் கைபேசிக்கு வந்த ரகசிய எண்களை (OTP) எவ்வித சந்தேகமுமின்றி அவள் வெள்ளந்தியாகப் பகிர்ந்திருக்கிறாள்.
ஸ்மார்ட்போன் என்ற சிறிய பெட்டிக்குள் உலகமே அடங்கிவிட்டது என்று நாம் பெருமைப்படுகிறோம். ஆனால், எந்த முகமுமே தெரியாத ஒரு திருடன், அந்தச் சிறிய திரையின் வழியாக நம் வீட்டு வரவேற்பறைக்குள்ளேயே ஊடுருவி, நாம் வியர்வை சிந்திச் சேர்த்த பணத்தை நம் கண்முன்னாலேயே திருடிச் செல்வதை டிஜிட்டல் வளர்ச்சி என்று சொல்வதா? இல்லை நவீன உழைப்புச் சுரண்டல் என்று சொல்வதா?
கைபேசியின் மெல்லிய வெளிச்சத்தில், தான் பகிர்ந்தது 'பரிவர்த்தனைக்கான எண்' (Transaction OTP) என்ற குறுஞ்செய்தியை அவள் மீண்டும் படித்துப் பார்த்த அந்த நொடியில், ஒரு கர்ப்பிணியின் இதயம் எவ்வளவு அதிர்ச்சியில் துடித்திருக்கும்? பதறியடித்துக் கொண்டு வங்கியின் வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொண்டு தன் கணக்கை முடக்குவதற்குள், பல்லாயிரக்கணக்கான ரூபாய் அவளது கணக்கில் இருந்து மாயமாகியிருக்கிறது.
கர்ப்பிணியான அக்காவால் காவல் நிலையத்துக்குச் சென்று அலைந்து திரிய முடியாது என்பதால், அவளுக்காக அவளது தம்பிதான் சைபர் கிரைம் கதவுகளையும், தாலுகா காவல் நிலையப் படிகளையும் நீதிகேட்டு ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறான்.
கண்ணுக்குத் தெரியாத ஒரு டிஜிட்டல் திருடனை நம்பி, உழைப்பை எல்லாம் வெறும் ஆறு இலக்க எண்களில் பறிகொடுத்துவிட்டு, தனிமையில் கண்ணீர் வடிக்கும் இது போன்ற குடும்பங்களின் வலிகளை நாம் சாதாரணமாகக் கடந்து செல்ல முடியுமா? நான்கு சுவர்களுக்குள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற நமது நம்பிக்கையை, இந்தத் தொழில்நுட்பத் திருடர்கள் எளிதாக உடைத்தெறிவதை இன்னும் எத்தனை காலத்திற்கு நாம் வேடிக்கை பார்க்கப் போகிறோம்?
