தூத்துக்குடி வக்கீல் முத்துக்குமார் வெட்டிக்கொலை செய்யப்பட்ட வழக்கில், கொலையாளிகள் சதித் திட்டம் தீட்டியதை நேரில் கேட்டதாக நெல்லை மத்திய சிறை வளாகத்தில் அமைந்துள்ள சிறப்பு கோர்ட்டில் கூலித் தொழிலாளி பரபரப்பு சாட்சியம் அளித்தார்.

தூத்துக்குடி சோரீஸ்புரம் மடத்தூர் ரோட்டில் வக்கீல் முத்துக்குமார் என்பவரின் தாயாருக்கு சொந்தமான நகை அடகு கடை உள்ளது. கடந்த 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22ம் தேதி அவர் கடையில் நின்றுகொண்டிருந்த போது, ஒரு கும்பல் கடைக்குள் அத்துமீறி நுழைந்து அவரை கொடூரமாக வெட்டிக் கொன்றது. இது தொடர்பாக முத்துக்குமாரின் தம்பி ராம்குமார் (41) கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்தனர். இந்த வழக்கை போலீஸ் டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர் ஆகியோர் முழுமையாக விசாரித்து கோர்ட்டில் ஆவணங்களை தாக்கல் செய்தனர்.
இந்த கொலை வழக்கின் சாட்சிகளுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என கருதப்பட்டதால், நெல்லை மத்திய சிறை வளாகத்தில் உள்ள பழைய தியேட்டரில் சிறப்பு கோர்ட் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தூத்துக்குடி மாவட்ட பிசிஆர் கோர்ட் சார்பில் தினசரி அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. சென்னை ஐகோர்ட் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவின்படி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 15 நபர்களையும் கண்ணாடி தடுப்புக்கு பின்னால் அமைக்கப்பட்ட தனி அறையில் போலீசார் பாதுகாப்பாக அமர வைத்தனர்.
இந்த வழக்கில் அரசு தரப்பு 14வது சாட்சியாக கொத்தனார் கையாள் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளி முருகேஷ் (30) கோர்ட்டில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.
அவர் கூறுகையில், "கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நான் கோரம்பள்ளம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு வேலைக்கு சென்றேன். அப்போது ஜெயபிரகாஷ், ரமேஷ், முருகேசன் ஆகிய மூன்று நபர்களும் வக்கீல் முத்துக்குமாரை கொலை செய்வது குறித்து தங்களுக்குள் சதித் திட்டம் தீட்டி பேசி கொண்டிருந்தனர். இதை நான் நைசாக மறைந்திருந்து கேட்டேன். பின்னர் 4 அல்லது 5 நாட்கள் கழித்து வக்கீல் முத்துக்குமாரை நேரில் சந்தித்து இதுபற்றி எச்சரிக்கை செய்தேன். அதன் பிறகு 5 மாதங்கள் கழித்து பேப்பரை பார்த்த போதுதான் வக்கீல் முத்துக்குமார் படுகொலை செய்யப்பட்ட செய்தி எனக்கு தெரியவந்தது. உடனே முத்துக்குமாரின் தம்பி ராம்குமாரை போனில் தொடர்பு கொண்டு பேசினேன். அவர் வழிகாட்டியதன்பேரில் சிப்காட் போலீஸ் நிலையம் சென்று போலீஸ் டிஎஸ்பியிடம் நடந்த விபரங்களை வாக்குமூலமாக அளித்தேன்," என்றார்.
இதை தொடர்ந்து குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள் சாட்சி முருகேஷிடம் தீவிர குறுக்கு விசாரணை நடத்தினர். சாட்சி முருகேஷ் மீது உள்ள பல்வேறு வழக்குகள் குறித்தும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் இருந்தது குறித்தும் வக்கீல்கள் அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பினர். அதற்கு பதில் அளித்த முருகேஷ், தன் மீதான வழக்குகள் போலீசாரால் ஜோடிக்கப்பட்டவை என தெரிவித்தார். நீண்ட நேரம் குறுக்கு விசாரணை நடந்த நிலையில், நீதிபதி அவரது சாட்சியத்தை பதிவு செய்து முடித்தார்.